×

ஜி 20 விருந்துக்கு கார்கேவுக்கு அழைப்பு இல்லை எதிர்க்கட்சி தலைவர்களை பா.ஜ அரசு மதிப்பதில்லை: ராகுல்காந்தி குற்றச்சாட்டு

லண்டன்: இந்தியாவில் ஜனநாயக அமைப்புகள் மீது முழு அளவில் தாக்குதல் நடப்பதாக குறிப்பிட்ட ராகுல்காந்தி, ஜி 20 விருந்துக்கு கார்கேவை அழைக்காதது எதிர்க்கட்சி தலைவர்களை பா.ஜ அரசு மதிப்பதில்லை என்பதை காட்டுவதாக குற்றம் சாட்டினார். காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி 5 நாட்கள் பயணமாக ஐரோப்பாவுக்கு சென்றுள்ளார். அவரது இந்த வெளிநாட்டுப் பயணம் இந்திய அயலக காங்கிரஸ் மூலம் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. ராகுல் காந்தி நேற்றுமுன்தினம் பெல்ஜியம் நாட்டின் தலைநகர் பிரசல்ஸ் நகருக்கு சென்றடைந்துள்ளார். அங்கு ஐரோப்பிய ஆணைய எம்.பி.க்களை சந்தித்து பேசினார். அதன்பின் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு ராகுல்காந்தி பதில் அளித்து கூறியதாவது:

இந்தியாவில் ஜனநாயக அமைப்புகள் மீது முழு அளவிலான தாக்குதல் நடைபெற்று வருகிறது. நாட்டின் ஜனநாயக கட்டமைப்புகளை நசுக்கும் இந்த முயற்சி குறித்து ஐரோப்பிய யூனியன் நாடுகள் கவலையில் உள்ளன. ஜி 20 உச்சி மாநாட்டை இந்தியா தலைமை ஏற்று நடத்துவது மிகவும் நல்ல விஷயம். இந்தியா ஒரு பெரிய நாடு. ஒரு பெரிய நாடாக இருப்பதால், அது பல நாடுகளுடன் உறவுகளைக் கொண்டிருக்கும். எனவே இது ஒரு சாதாரண விஷயம். எவருடன் வேண்டுமானாலும் உறவு வைத்துக் கொள்ள இந்தியாவுக்கு முழு உரிமை உண்டு. ஆனால் ஜி20 இரவு விருந்துக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவிற்கு அழைப்பு இல்லை. மேலும் பல்வேறு எதிர்க்கட்சி தலைவர்களுக்கும் அழைப்பு இல்லை. அவர்கள் இந்தியாவின் 60 சதவீத மக்கள்தொகையின் தலைவர்கள்.

அவர்களை அழைக்காதது ஒன்றிய அரசு அவர்களை மதிப்பதில்லை என்பதைத்தான் காட்டுகிறது. அரசின் செயல் அதன் சிந்தனையைப் பற்றி கூறுகிறது. அதன் மூலம் இந்தியாவின் 60 சதவீத மக்களின் தலைவர்களை அவர்கள் மதிப்பதில்லை என்பதைத்தான் இந்த அரசு உங்களுக்கு சொல்கிறது. அதனால் தான் எதிர்க்கட்சித் தலைவரை (மல்லிகார்ஜுன் கார்கே) அழைக்க வேண்டாம் என்று அவர்கள் முடிவெடுத்துள்ளனர். அதன் பின்னால் என்ன வகையான சிந்தனை இருக்கிறது என்பதைப் பற்றி சிந்திக்க வேண்டும். இந்தியாவில் பாகுபாடு மற்றும் வன்முறை அதிகரித்து வருகிறது. நம் நாட்டின் ஜனநாயக அமைப்புகள் மீது முழு அளவிலான தாக்குதல் உள்ளது. இது அனைவருக்கும் தெரியும். நான் அரசை விமர்சனம் செய்வதால் அவர்கள் மிகவும் கவலையடைந்தனர். இவ்வாறு அவர் கூறினார்.

* சிறுபான்மையினர் மீது தாக்குதல்

ராகுல்காந்தி கூறும்போது,’ இந்தியாவில் சிறுபான்மையினர் தாக்குதலுக்கு உள்ளாகிறார்கள். அவர்கள் மட்டுமல்ல பல சமூகங்களும் தாக்கப்படுகின்றன. தலித் சமூகங்கள், பழங்குடி சமூகங்கள், தாழ்த்தப்பட்ட சமூகங்கள் தாக்குதலுக்கு உள்ளாகின்றன. நாட்டின் தன்மையை மாற்ற முயற்சி நடக்கிறது. மணிப்பூரில் நடந்த கலவரமும் அப்படிப்பட்ட ஒன்றுதான். காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி. அதில் யாரும் தலையிட முடியாது. ரஷ்யா-உக்ரைன் மோதலில் இந்தியாவின் தற்போதைய நிலைப்பாட்டை அனைத்து எதிர்க்கட்சிகளும் எந்தவிர பேதமும் இல்லாமல் ஏற்றுக் கொள்ளும். நாங்கள் ரஷ்யாவுடன் உறவு வைத்திருக்கிறோம்’ என்று அவர் கூறினார்.

* இந்திய ஒற்றுமை யாத்திரை

ராகுல் கூறும்போது,’ இந்தியா முழுவதும் சுமார் 4,000 கிமீ நீளமுள்ள இந்திய ஒற்றுமை யாத்திரையை நான் மேற்கொண்டேன். இந்த யாத்திரை தான் மக்களுடன் என்னை நெருக்கமாகக் கொண்டு வந்தது. அவர்களின் குரல் அரசிடம் எடுபட வேண்டும். அங்குதான் பாஜவுக்கும் எங்களுக்கும் அடிப்படை வேறுபாடு உள்ளது. நாங்கள் மக்களின் குரலுக்கு மதிப்பளிக்கிறோம். ஏழைகளின் குரலுக்கு மதிப்பளிக்கிறோம், அனைவரின் குரலையும் மதிக்கிறோம், நாங்கள் முடிவுகளை எடுப்பதற்கு முன் அனைவருடன் உரையாட விரும்புகிறோம்’என்றார்.

 

The post ஜி 20 விருந்துக்கு கார்கேவுக்கு அழைப்பு இல்லை எதிர்க்கட்சி தலைவர்களை பா.ஜ அரசு மதிப்பதில்லை: ராகுல்காந்தி குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : G20 dinner ,Kharge ,BJP govt ,Rahul Gandhi ,London ,India ,G20 ,BJP government ,
× RELATED இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்தால்...